உடனடிச்செய்திகள்

Latest Post

Sunday, May 20, 2018

“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்” தோழர் பெ. மணியரசன்.

“காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள்” தோழர் பெ. மணியரசன் - காவிரி உரிமை மீட்புக்குழு, ஒருங்கிணைப்பாளர்.
உச்ச நீதிமன்றம் 18.5.2018 அன்று இறுதி செய்த காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருபெரும் ஊனங்கள் இருக்கின்றன.

ஒன்று, கர்நாடக அணைகளின் மதகுகளைத் திறந்து மூடும் அதிகாரம் காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு மட்டுமே உண்டு என்று நேரடியாகக் கூறப்படாதது.

கர்நாடக அணைகளின் மதகுகளைத் திறந்து விடும்படி காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகப் பாசனத்துறையினர்க்கு ஆணை இட்டுத்தான் செயல் படுத்த முடியும் என்ற நிலை இருந்தால், கர்நாடக அரசு அவ்வாறு தன் அதிகாரிகளும் ஊழியர்களுக்கும் திறக்கக் கூடாது என்று ஆணை இட்டால், நிலைமை என்னவாகும்?

ஏனெனில் ஏற்கெனவே பலமுறை தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடும்படி உச்சநீதிமன்றம் ஆணை இட்டும் அதைச் செயல்படுத்த முடியாது என்று வெளிப்படையாகக் கர்நாடக அரசு மறுத்து வந்துள்ளது.
கடந்த 2016 இல் 10,000 கன அடி, 6,000 கன அடி, 2000 கன அடி தண்ணீர் திறந்து விடுமாறு பலமுறை உச்சநீதிமன்றத் தீபக் மிஸ்ரா ஆயம் கட்டளை இட்டும் தண்ணீர் திறந்து விட மறுத்துவிட்டது கர்நாடக அரசு. அது மட்டுமின்றி, கர்நாடக சட்டப்பேரவையைக் கூட்டி தண்ணீர் திறந்து விட முடியாது என்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றியது கர்நாடக அரசு.

உச்சநீதிமன்றக் கட்டளையை மீறியதற்காக கர்நாடக அரசின் மீது உச்சநீதி மன்றமோ அல்லது இந்திய அரசோ ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. தமிழ்நாடு பாதிக்கப்பட்டதுதான் மிச்சம்!

இரண்டாவது ஊனம், ஏதாவதொரு மாநிலம் மாற்றுக் கருத்து கூறினால் காவிரி மேலாண்மை ஆணையத்தில் வாக்களிக்கும் உரிமையுள்ள ஒன்பது உறுப்பினர்களின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துப்படி முடிவெடுக்க வேண்டும் என்று இருப்பதாகும். ஆணையத்தின் தலைவர் மற்றும் நான்கு உறுப்பினர்கள் – ஆக மொத்தம் ஐந்து பேர் நடுவண் அரசின் அதிகாரிகள்; நடுவண் அரசால் அமர்த்தப்படுவோர் ஆவர். தமிழ்நாடு உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கும் தலா ஒருவர் வீதம் நான்கு பேர்.

இதில் கர்நாடக உறுப்பினர் மாற்றுக் கருத்து தெரிவித்து, தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்து விடமறுத்தால், நடுவண் அரசின் ஐந்து உறுப்பினர்கள் நடுவண் அரசின் வழிகாட்டுதல் படி நடந்து கொள்வார்கள். காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு 1991 – இல் வழங்கப்பட்டதிலிருந்து, இறுதித்தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டு செயல்படுத்துமாறு 2013 – இல் உச்சநீதிமன்றம் ஆணையிட்டதிலிருந்து இதுவரை எந்தத் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்து வருகிறது இந்திய அரசு. காங்கிரசு அரசாக இருந்தாலும் பாசக அரசாக இருந்தாலும் நடுவண் அரசின் நிலைபாடு எப்போதும் தமிழ்நாட்டிற்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதுதான். இனி அந்தப் பாகுபாடு தொடராது என்பதற்கு என்ன உறுதி? கர்நாடக உறுப்பினர்களின் எதிர்ப்புக்கு சாதகமாக இந்திய அரசு அதிகாரிகள் நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது.

இந்த இருபெரும் ஊனங்கள் புதிய காவிரி மேலாண்மை ஆணையத்தில் இருக்கின்றன. இவற்றைச் சரி செய்வது எப்படி? இந்த ஊனங்களால் பாதிப்பு வராது என்று நேரடியாக தெளிவாக உறுதி கூற நரேந்திரமோடி அரசு தயாரா? உச்சநீதிமன்றம் அப்போது தலையிட்டு சரிசெய்யுமா? கடந்த கால அனுபவங்கள், “இல்லை” என்ற விடையைத்தான் தருகின்றன.

இவற்றிக்கப்பால், 16.2.2018 அன்று தீபக் மிஸ்ரா ஆயம் அறிவித்த காவிரித் தீர்ப்பு, இந்திய அரசமைப்புச் சட்டவிதிகளுக்கு முரணானது. 1956 ஆம் ஆண்டின் தண்ணீர்த் தகராறு சட்டத்திற்கு எதிரானது. அத்துடன் அத்தீர்ப்பு மரபுவழித் தண்ணீர் உரிமை (Riparian Right) என்ற அடிப்படை உரிமையைத் தகர்த்து விட்டது. தேவைக் கேற்ற தண்ணீர் பகிர்வு (Equitable Share) கோட்பாட்டைத் திணித்துள்ளது. வேளாண்மைக்கு நிகராகத் தொழில்துறைக்கு தண்ணீர் அளிக்கும் கோட்பாட்டைப் புகுத்தியுள்ளது.

இந்த அநியாயங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை மிக மோசமாகக் குறைத்துவிட்டது உச்சநீதிமன்றம்.

எனவே இதைச் சரி செய்ய காவிரி வழக்கிற்கு உச்சநீதிமன்றத்தில் ஏழு நீதிபதிகளைக் கொண்ட அரசமைப்பு ஆயம் அமைக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான வழக்கைத் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடுக்க வேண்டும் என்றும் காவிரி உரிமை மீட்புக் குழு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. முல்லைப்பெரியாறு வழக்கு, உச்சநீதிமன்ற மூன்று நீதிபதிகளால் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு வழங்கும் நிலையில் அரசமைப்பு ஆயத்திற்கு மாற்றப்பட்ட முன் எடுத்துக்காட்டையும் சுட்டிக் காட்டி வருகிறது.

மேற்கண்ட எச்சரிக்கைகளுடன் - விழிப்புணர்வுடன் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது பற்றி தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

Friday, May 18, 2018

"முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை!" தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!

"முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை!" தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!
ஆரிய இந்திய வல்லாதிக்க அரசின் ஒருங்கிணைப்பில் உலக வல்லரசுகளின் உதவியோடு, முள்ளிவாய்க்காலில் சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த ஆற்றொணாத்துயரம் நடந்து முடிந்து, ஒன்பது ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. 

தமிழ்நாடு உள்ளிட்டு உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் அனைவரின் நெஞ்சங்களிலும் ஆறாத காயமாக முள்ளிவாய்க்கால் படுகொலை தங்கி இருக்கிறது. 

மண்ணையும், மானத்தையும் காக்கும் தமிழீழ விடுதலைப் போரில் உயிரீகம் செய்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் வீரவணக்கத்தை மீண்டும் உரித்தாக்குகிறோம்! 

இந்த இன அழிப்பு, பன்னாட்டுச் சமூகத்தின் உறுதியான கேள்விக்கு உட்படாமல் சிங்களப் பேரினவாதம் உலா வருவது அடுத்தப் பெரும் துயரமாகும்! 

நடந்தது இனப்படுகொலைதான் என்பதற்கான அடுக்கடுக்கான ஆதாரங்கள் வந்த பின்னும், பன்னாட்டுச் சமூகம் வெளிப்படையான இந்த உண்மையை இன்றுவரை ஏற்க மறுத்து வருகிறது. அதனடிப்படையில், தமிழீழத் தனியரசு தொடர்பான கருத்து வாக்கெடுப்பு நடத்த மறுத்தும் வருகிறது. 

அதைவிட, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், கடந்த 2015 அக்டோபரில் சிங்கள அரசு முன்மொழிந்து - ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் இலங்கை அரசு ஏற்றுக் கொண்ட நடவடிக்கைகள்கூட இன்றுவரை நடைபெறவில்லை!

தமிழீழ மண்ணில் சிங்களக் குடியேற்றம் குறைவதற்கு மாறாக, தீவிரம் பெற்றுள்ளது. கிழக்கு மாகாணம் தமிழீழத் தாயகம் என்ற தகுநிலையை கிட்டத்தட்ட இழந்து விட்டது! வரம்பற்ற சிங்களக் குடியேற்றம் நடந்து முடிந்துவிட்டது. 

இப்போது, அது வடக்கு மாகாணத்திலும் விரைவாக நடந்து வருகிறது. தமிழீழக் கடற்பரப்பில் மீன் பிடிக்கும் உரிமம் மேலும் மேலும் சிங்களர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. தமிழீழ மீனவர்கள் மீன்பிடித் தொழிலிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு வருகிறார்கள். 

தமிழர்களின் கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டிடங்கள் மிக வேகமாக புத்த விகாரைகளாகவும், புத்த பிக்குகளின் தங்குமிடமாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. 

இன்றும் தமிழீழ மண்ணில் சிங்களப் படைக் குவிப்பு பெருமளவு குறையவில்லை. “பயங்கரவாதத்தை முற்றிலும் ஒழித்த ஒரே நாடு சிறீலங்காதான்” என்று மார்தட்டும் இலங்கையின் தலைமைத் தளபதி மகேஷ் சேனநாயகா, “படைக்குறைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை” என்று இப்போதும் கொக்கரிக்கிறார் (The Hindu, 16.05.2018). 

ஏறத்தாழ 60,000 ஏக்கர் தமிழர் நிலம் சிங்களப் படையினர் வசம் உள்ளது. அதில், சில நூறு ஏக்கர் தனியார் நிலங்களைத் தவிர பிற எதுவும் மீள வழங்கப்படவில்லை! பண்ணைகள், அரசுக் கட்டடங்கள், பல்வேறு சமூகப் பயன்பாட்டு நிலையங்கள், காடுகள் ஆகியன சிங்களப் படைகளின் பிடியில் இருக்கின்றன. 

ஏ-9 நெடுஞ்சாலையில் வணிக நிறுவனங்கள் சிங்களப் படையணிகளாலேயே நடத்தப்படுகின்றன. உணவகங்கள், சுற்றுலா விடுதிகள், விழா நடத்தும் மண்டபங்கள், கேளிக்கை விடுதிகள். தோட்டங்கள், பண்ணைகள், குழிப்பந்தாட்ட (கோல்ஃப்) நிலையங்கள் போன்ற பலவும் இராணுவத்தினராலேயே நடத்தப்படுகின்றன. இந்த வகையில், சிங்கள இராணுவமே ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல தமிழீழ மண்ணில் செயல்படுகிறது. 

2016இல் இந்தக் குழுமங்களின் வணிக நடவடிக்கைகளால் ஐம்பது இலட்சம் டாலர் தொகை அளவுக்கு சிங்கள இராணுவம் இலாபம் ஈட்டியுள்ளது. இவற்றில் கடைநிலைப் பணிகளில் சற்றுக் கூடுதல் ஊதியத்திற்குத் தமிழர்கள் அமர்த்தப்பட்டு, சிங்களப் படைக்கு இசைவானவர்களாக அவர்களில் கணிசமானவர்களை மாற்றும் முயற்சியும் நடந்து வருகிறது. 

கல்வி நிறுவனங்கள், வருவாய் அலுவலகங்கள் உள்ளிட்ட பொது மக்கள் சேவைத் துறைகளில் 95 விழுக்காடு தமிழீழப் பகுதியில் இன்னும் சிங்களப் படையாலேயே நடத்தப்படுகின்றன. 

ஐ.நா. தீர்மானத்தில், தானே ஒத்துக் கொண்டபடி பயங்கரவாதத் தடைச் சட்டத்தை சிங்கள அரசு கைவிடவில்லை. 

காணாமல் போகச் செய்யப்பட்டவர்கள் தொடர்பாக படையினர் மீதோ, சிங்களக் காடையர்கள் மீதோ இதுவரை எந்தக் குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. குறிப்பாக, சரணடைந்த புலிகள் பலரது கதி என்ன என்பது குறித்து எந்தத் தகவலும் இல்லை! 

முள்ளிவாய்க்கால் நினைவு நாளைக் கடைபிடிக்கும் இயல்பான நிகழ்வுகள்கூட மிகப்பெரும் அடக்குமுறைகளையும் கெடுபிடிகளையும் சந்தித்து வருவது தொடர்கிறது. 

வெளித் தோற்றத்தில் அமைதி திரும்பி வருவதாகவும், சனநாயகம் மீண்டு வருவதாகவும் காட்டப்பட்டாலும், உண்மையில் நிறுவனமயமாக்கப்பட்ட உரிமைப் பறிப்புகள் - சனநாயகக் குலைப்புகள் தீவிரம் பெற்றுள்ளன. 

இதுகுறித்து, பன்னாட்டு அரங்கில் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராக எந்தக் கேள்வியும் எழுந்துவிடாதவாறு மிகக் கவனமாக இந்திய அரசு பார்த்துக் கொள்கிறது. 

ஐ.நா. உறுப்பு அமைப்புகளில் இதுகுறித்து குரல் எழுப்புவோர் வெளிப்படையாக அச்சுறுத்தப்படுகிறார்கள். 2017 செப்டம்பரில் ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் பேசிய ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சிங்கள இனவெறியர்களால் மிரட்டப்பட்டது இதற்கொரு சான்று! 

இந்நிலையில், தமிழீழ விடுதலைக்கான நீண்ட நெடிய போராட்டம் பல கட்டங்களைத் தாண்டி, பொறுமையாகவும் விடாப்பிடியாகவும் பல அரங்குகளில் நடத்தப்பட வேண்டிய போராட்டமாக மாறியுள்ளது. இவை அனைத்திற்கும் முதன்மைத் தளமாக தமிழீழ மண்ணின் அம்மக்கள் நடத்தும் போராட்டமே அமையும்! 

காணாமல் ஆக்கப்பட்டோர் மீட்பு, சிங்களக் குடியேற்றம் நிறுத்தப்படுதல், சிங்களப் படைகள் வெளியேற்றப்படுதல், மனித உரிமை மீட்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, தமிழீழ மண்ணில் அம்மக்கள் இருக்கும் வாய்ப்புக்கிடையில் விடாப்பிடியாகப் போராடுவது முதன்மைத் தேவையாகும்! 

அதேபோல், தமிழ்நாட்டிலும், உலகின் பல நாடுகளிலும் சர்வதேச அரங்குகளின் கவனத்தை ஈர்க்கும் போராட்டங்கள் தமிழீழ மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்து நடைபெற வேண்டும். 

சிங்கள அரசு இயற்றும் புதிய அரசியல் யாப்பு என்ற மாய வலைக்குள் தமிழர்கள் வீழ்ந்துவிடக்கூடாது! இனப்படுகொலைக்கு எதிரான தற்சார்பான பன்னாட்டு விசாரணை, தமிழீழத்திற்கான கருத்து வாக்கெடுப்பு ஆகியவற்றில் தெளிவோடும் உறுதியோடும் நிற்க வேண்டும். 

ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் சம்பந்தர் - சுமந்திரன் போன்ற இரண்டகர்களை அடையாளங்கண்டு அப்புறப்படுத்தி, தெளிவான திசைவழியில் தங்கள் போராட்டங்களை உறுதியாக முன்னெடுக்க வேண்டும். 

குறிப்பாக, தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்திய அரசு பன்னாட்டு அரங்கில் ஈழத்தமிழர்களுக்கு ஒரு சிறிது நீதியும் கிடைக்காமல் தடுப்பதை எதிர்த்து, விழிப்போடு போராட வேண்டும்! 

அதுதான் முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு தமிழர்கள் செய்யும் கடமையாகவும் இருக்கும்! 

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் – 2018 மே 16-31 இதழின் தலையங்கக் கட்டுரை இது).

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com

Thursday, May 17, 2018

அதிகாரமற்ற பொம்மைச் செயல்திட்டம் அளித்து தமிழினத்தை வஞ்சிப்பதா? புதுச்சேரியில் இந்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்ட காவிரி உரிமை மீட்புக் குழு தோழர்கள் கைது!

அதிகாரமற்ற பொம்மைச் செயல்திட்டம் அளித்து தமிழினத்தை வஞ்சிப்பதா? புதுச்சேரியில் இந்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட்ட காவிரி உரிமை மீட்புக் குழு தோழர்கள் கைது! 

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பில் உள்ளது போல் தன்னாட்சி அதிகாரம் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காமல், கர்நாடக அணைகளில் தண்ணீர் திறந்துவிடும் அதிகாரமற்ற பொம்மைச் செயல்திட்டத்தை தந்திரமாகத் தாக்கல் செய்து, தமிழினத்தை மீண்டும் வஞ்சிக்க முயன்றுள்ளது இந்திய அரசு! இந்திய அரசின் இந்த வஞ்சகச் செயலைக் கண்டித்து, இன்று (17.05.2018) புதுச்சேரியில், இந்திய அரசு ஆவணக் காப்பகம் முற்றுகையிடப்பட்டது.
புதுச்சேரி ஜீவானந்தபுரத்தில் அமைந்துள்ள இந்திய அரசு ஆவணக் காப்பகத்தை முற்றுகையிடும் இப்போராட்டத்திற்கு, காவிரி உரிமை மீட்புக் குழு புதுச்சேரி ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் புதுச்சேரி செயலாளருமான தோழர் இரா. வேல்சாமி தலைமை தாங்கினார்.
 


உலகத் தமிழ்க் கழகப் புதுச்சேரி அமைப்பாளர் ஐயா கோ. தமிழுலகன், நாம் தமிழர் கட்சி தொகுதிச் செயலாளர் திரு. வெ. கார்த்திகேயன், நா.த.க. தொழிலாளர் நலச்சங்கச் செயலாளர் தோழர் இரமேசு, இளைஞர் பாசறை தோழர் மணிபாரதி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் மணி, ஆனந்தன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட 25 தோழர்கள் தற்போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட தோழர்கள் தற்போது, தன்வந்திரி காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். 

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

Wednesday, May 16, 2018

காவிரி செயல் திட்டத்தின் உயிர் தன்னதிகாரம் தமிழ்நாடு அதை வலியுறுத்த வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

காவிரி செயல் திட்டத்தின் உயிர் தன்னதிகாரம் தமிழ்நாடு அதை வலியுறுத்த வேண்டும்! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
காவிரி வழக்கில் இன்று (16.05.2018) உச்ச நீதிமன்றத்தில் மிகவும் அடிப்படையான – உயிரான திருத்தம் ஒன்றை தமிழ்நாடு அரசு முன்வைக்காமல் போனது பெருந்துயரம் ஆகும்! அதாவது அமைக்கப்படவுள்ள “காவிரி செயல்திட்டம்” – தற்சார்பான தன்னதிகாரம் (Independent) கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும். அதற்கான திருத்தத்தை உச்ச நீதிமன்றம் சேர்க்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு வலியுறுத்தியிருக்க வேண்டும். செயல்திட்டத்தின் அதிகாரம் தெளிவில்லாமல் இருக்கிறது என்று கூறியதோடு தமிழ்நாடு அரசு நிறுத்தியிருக்கக் கூடாது!

காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பு பாகம் – 5இல் – 15ஆம் பத்தியில் (Para) செயல்திட்டம் பற்றி கூறும்போது, “தற்சார்பு அதிகாரம்” (Independent) கொண்டதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதற்குமுன் 14ஆம் பத்தியில் “செயல்திட்டம் போதுமான அதிகாரம் கொண்டதாக இருக்க வேண்டும்; அவ்வாறான அதிகாரம் அதற்கு இல்லையென்றால் தீர்ப்பாயத்தின் முடிவுகள் ஒரு துண்டுத்தாளில் (Piece of Paper) மட்டுமே இருக்கும் என்று அஞ்சுகிறோம்” என்று தீர்ப்பாய நீதிபதிகள் மூவரும் கூறியுள்ளனர்.

இந்திய அரசின் நீர்வளத்துறை தயாரித்த செயல் திட்ட வரைவில் வேண்டுமென்றே தந்திரமாக “தற்சார்பு அதிகாரம் (Independent)” என்ற சொல்லைத் தவிர்த்துவிட்டது; தீர்ப்பாயத்தில் உள்ள மற்ற சொற்களைப் பயன்படுத்தி இருக்கிறது.

அப்படிப்பட்ட இந்த செயல்திட்டத்திற்குத்தான் “காவிரி மேலாண்மை வாரியம்” என்று பெயர் மட்டும் வைக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கோரியிருக்கிறது. அக்கோரிக்கையை உச்ச நீதிமன்றமும், இந்திய அரசும் ஏற்றுக் கொண்டு விட்டது.

இந்த “காவிரி மேலாண்மை வாரியத்தின்” கட்டளையை ஏதாவதொரு மாநிலம் செயல்படுத்த மறுத்தால், அதைச் செயல்படுத்திக் கொள்வதற்கு தேவையான உதவியை அது நடுவண் அரசிடம் கோரலாம் என்று தீர்ப்பாயத் தீர்ப்பில் உள்ளது. இதை “செயல்படுத்த மறுப்பது பற்றி நடுவண் அரசிடம் மேலாண்மை வாரியம் கூறி உதவி கோரலாம்; அதில் நடுவண் அரசு எடுக்கும் முடிவே இறுதியானது” என்று வரைவுச் செயல்திட்டத்தில் நடுவண் அரசு தந்திரமாகச் சேர்த்துள்ளது.

“மேலாண்மை வாரியத்தின்” கட்டளையை ஏற்க ஒரு மாநிலம் மறுத்தால், அதைச் செயல்படுத்தி வைக்கத் தேவையான காவல்துறை மற்றும் இராணுவ உதவிகளைப் போன்ற உதவிகளை இந்திய அரசிடம் கோரலாம் என்ற பொருளில்தான் மேலாண்மை வாரியம் நடுவண் அரசின் உதவியைக் கோரலாம் என்று தீர்ப்பாயம் கூறியுள்ளது.

இந்திய அரசின் முடிவே இறுதி முடிவு என்று புதிதாகச் சேர்க்கப்பட்ட பத்தியை நீக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசு கோரியதும், அத்திருத்தத்தை தீபக் மிஸ்ரா ஆயம் ஏற்றுக் கொண்டதும் வரவேற்கத்தக்கது!

அடுத்து, என்னென்ன பயிர் செய்ய வேண்டும் என்பதையும், சொட்டு நீர்ப் பாசனம் உட்பட என்னென்ன பாசன முறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் மேலாண்மை வாரியம் முடிவு செய்யும் என்று நடுவண் நீர்வளத் துறை தயாரித்த செயல் திட்டத்தில் கூறப்பட்டிருப்பதையும் நீக்குமாறு தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் கோர வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணைகள் யாரும் கட்டக் கூடாது என்பதை செயல்திட்டத்தில் சேர்க்க வேண்டும் என்று கட்டளையிடுமாறு உச்ச நீதிமன்றத்தைத் தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

கர்நாடக அரசு திருந்தவே இல்லை என்பதற்கான சான்றாகத்தான் “மாதவாரியாகத் தண்ணீர்திறந்து விடக் கூறும் பகுதியை நீக்க வேண்டும்” என்றும், சூலை மாதத்திற்கு விசாரணையை மாற்ற வேண்டும் என்றும் அடாவடிக் கோரிக்கைகளை உச்ச நீதிமன்றத்தில் வைத்துள்ளது. உச்ச நீதிமன்றம் கர்நாடகத்தின் முறையற்ற கோரிக்கைகளை ஏற்கக் கூடாது!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

Monday, May 14, 2018

பொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு! பெ. மணியரசன் அறிக்கை!

பொம்மைச் செயல்திட்டம் கொடுத்திருக்கிறது மோடி அரசு! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் அறிக்கை!
இந்திய அரசின் நீர்வளத்துறை இன்று (14.05.2018) உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள காவிரி வரைவுச் செயல்திட்டம் - தன்னாட்சி அதிகாரமற்ற ஒரு பொம்மை பொறியமைவாகவே உள்ளது. 

“காவிரி தண்ணீர் மேலாண்மை செயல்திட்டம் – 2018” (Cauvery Water Management Scheme 2018) என்ற பெயரில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த வரைவுத் திட்டத்தின் பிரிவு – 9, செயல்திட்டத்தின் (ஆணையத்தின்) அதிகாரங்கள், செயல்பாடுகள், கடமைகள் பற்றி குறிப்பிடுகின்றன. அதில், உட்பிரிவு (iv) பின்வருமாறு கூறுகிறது : 

“கேரளத்தின் பாணாசுர சாகர், கர்நாடகத்தின் ஏமாவதி, ஏரங்கி, கபினி, கிருஷ்ணராஜசாகர், தமிழ்நாட்டின் கீழ்பவானி, அமராவதி மற்றும் மேட்டூர் ஆகியவற்றிலிருந்து ஒரு மாதத்திற்கு 10 நாள் கணக்கில், அந்தந்த மாநிலம் தண்ணீர் திறந்துவிடுவதற்கு ஒட்டுமொத்தமான ஒரு வழிகாட்டுதலை இந்த ஆணையம் கொடுக்கும்”.

இந்த ஆணையம் தன் பொறுப்பில் தண்ணீர் திறந்துவிடாது என்பதை இப்பிரிவு கூறுகிறது. தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரை, கர்நாடக அரசுதான் இந்த ஆணையம் வந்தபிறகும் திறந்துவிடுமாம்!

ஒரு மேற்பார்வைப் பணியைத்தான் இந்த ஆணையம் செய்யும் என்பதை ஏற்கெனவே, இதற்கு  முன் உள்ள பிரிவு (9)(ii) உறுதி செய்கிறது. 

உச்ச நீதிமன்றத்தின் கட்டளையையே துச்சமாகத் தூக்கியெறிந்துவரும் கர்நாடகம், புதிதாக அமைக்கப்படும் இந்த ஆணையத்தின் “வழிகாட்டுதலையா” செயல்படுத்தும்? கேழ்வரகில் நெய் வடிகிறது என்றால், கேட்பவருக்கு மதி எங்கே என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது! 

அடுத்து, பின்வரும் பிரிவு (9)(xiv)இல், ஏதாவதொரு மாநிலம் இந்த ஆணையத்தின் வழிகாட்டுதலை செயல்படுத்தவில்லை என்றால், அந்த ஆணையம் நடுவண் அரசிடம் முறையிடும் என்றும் அதில் நடுவண் அரசு எடுக்கும் முடிவே இறுதியானது என்றும் கூறுகிறது. 

1991 – சூன் 25ஆம் நாள், காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இடைக்காலத் தீர்ப்பிலிருந்து இன்று வரை காவிரித் தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளையும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளையும் இந்திய அரசு தொடர்ந்து செயல்படுத்த மறுத்து வருகிறது என்பதை, தமிழ்நாடு மட்டுமல்ல – உலகமே அறியும்! புதிய ஆணையத்தின் வழிகாட்டுதலை கர்நாடகம் ஏற்க மறுத்தால், இந்திய அரசிடம் புகார் செய்து தீர்வு காணலாம் என்பது போகாத ஊருக்கு வழி சொல்வதாகும்! 

இந்த வரைவுச் செயல்திட்டம் – நீதிமன்றத் தீர்ப்பைச் செயல்படுத்துவது, கர்நாடகத்திற்கும் தமிழ்நாட்டிற்குமான தண்ணீர்ப் பகிர்வு, அதன்படி கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்குத் தண்ணீர்த் திறந்துவிடுதல் என்ற வரம்புகளுக்கு அப்பால் சென்று, என்னென்ன பயிர் செய்யலாம், என்னென்ன பயிர் செய்யக்கூடாது, சொட்டு நீர்ப் பாசனம், தொழிற்சாலைகளுக்கு எவ்வளவு தண்ணீர் தருவது, மற்ற மற்ற காரியங்களுக்கு எவ்வளவு தண்ணீர் தருவது உள்ளிட்ட எல்லா செய்திகளிலும் தலையிடும் என்றும் இதிலும் இந்திய அரசின் தலையீடு இருக்குமென்றும் கூறுகிறது. 

அடுத்து, பிரிவு (9)(xviii)இல், இந்திய அரசு அவ்வப்போது வெளியிடும் எல்லா வகை வழிகாட்டுதல்களையும் இந்த ஆணையம் செயல்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இதைவிடக் கொடுமையாக இந்த ஆணையம், தனது மேற்கண்ட பணிகளை தனியாருக்கு குத்தகைக்கு விடலாம் என்று வரைவுச் செயல்திட்டத்தின் பிரிவு – 12 கூறுகிறது. 

இவற்றையெல்லாம் பார்க்கும்போது, குரங்கு ஆப்பம் பிரித்த கதைதான் நினைவுக்கு வருகிறது! 

காவிரித் தண்ணீரை இந்திய அரசின் தேசிய நீர்க் கொள்கையின்படி தனியாருக்குக் குத்தகைக்குக் கொடுத்து, சாகுபடிக்கும் குடிநீருக்கும் மீட்டர் வைத்து விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்தவும் இந்த ஆணையத்திற்கு இந்திய அரசு அதிகாரம் வழங்கியிருக்கிறது. 

கடந்த 08.05.2018 அன்று உச்ச நீதிமன்றத்தில், வரைவுச் செயல்திட்டத்தைத் தாக்கல் செய்ய முடியாததற்குக் காரணம் - நடுவண் அமைச்சரவையின் ஒப்புதல் பெற முடியாததுதான் என்றும், தலைமை அமைச்சரும் மற்ற அமைச்சர்களும் கர்நாடகத் தேர்தல் பரப்புரைக்குச் சென்று விட்டனர் என்றும் இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே. வேணுகோபால் காரணம் கூறினார்.  

ஆனால், இன்று (14.05.2018) தாக்கல் செய்யப்பட்டுள்ள வரைவுச் செயல்திட்டம், நடுவண் அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறவில்லை. இதுபற்றி, உச்ச நீதிமன்ற வளாகத்திலிருந்த தமிழ்நாடு சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்திடம் கேட்டபோது, நடுவண் நீர்வளத்துறையின் வரைவுச் செயல்திட்டத்திற்கு நடுவண் அமைச்சரவையின் ஒப்புதல் தேவையில்லை, உச்ச நீதிமன்றத்தில் அதை நேரடியாகத் தாக்கல் செய்ய அவர்களுக்கு அதிகாரமிருக்கிறது என்று கூறினார். கடந்த 08.05.2018 அன்று வரைவுச் செயல்திட்டத்தைத் தாக்கல் செய்ய முடியாததற்குக் காரணம் அமைச்சரவை ஒப்புதல் இல்லாததுதான் என்று இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கூறியது முழுப்பொய் என்பதற்கு தமிழ்நாடு சட்ட அமைச்சரின் கூற்றே சாட்சியம்! இதே சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், 08.05.2018 அன்று நடுவண் அமைச்சரவை ஒப்புதல் தேவையில்லை என்று கூறாதது ஏன்?

அதே சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், இன்று தாக்கல் செய்யப்பட்ட - கர்நாடக அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிடும் அதிகாரமில்லாத செயல்திட்டத்தை வரவேற்று தமிழ்நாடு அரசுக்கு வெற்றி என்று கூறினார். அத்துடன் இந்திய அரசுக்கு நன்றி கூறினார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழ்நாட்டிற்கு நீதி கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார். 

இவையெல்லாம், ஏற்கெனவே பா.ச.க. தலைமையினால் எழுதிக் கொடுக்கப்பட்ட வாசகங்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. பா.ச.க.வின் ஊதுகுழல்தான் அண்ணா தி.மு.க. ஆட்சி என்று  அ.இ.அ.தி.மு.க.வின் தொண்டர்கள் உள்பட அனைத்துத் தமிழர்களும் புரிந்து கொள்வார்கள்! 

பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டுக்குப் பாலூட்டும் தாயாக விளங்கி வந்த காவிரியின் மார்பறுக்கும் நரேந்திர மோடியின் நயவஞ்சகத்தையும், தமிழ்நாடு அரசின் இனத்துரோகத்தையும் முறியடிக்கும் வகையில் தமிழர்கள் கிளர்ந்தெழுந்து உரிமை மீட்புப் போராட்டக் களங்களை அமைக்க வேண்டிய தேவை அதிகமாகியுள்ளது என்பதை காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

Thursday, May 10, 2018

இந்தப் போராட்டங்கள் வெற்றியை நோக்கி… தஞ்சை விமானப்படைத்தளம் முற்றுகை! தோழர் பெ. மணியரசன் அழைப்பு!

இந்தப் போராட்டங்கள் வெற்றியை நோக்கி… தஞ்சை விமானப்படைத்தளம் முற்றுகை! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அழைப்பு! 
இன ஒதுக்கல் கொள்கை உள்ள நாட்டைத் தவிர, வேறு எந்த நாட்டிலாவது காவிரி உரிமையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிபோல் இனப்பாகுபாடு காட்டி அநீதி இழைக்கப்பட்டதுண்டா?

இந்தியாவிலிருந்து சிந்து, சீலம், செனாப் ஆறுகள் ஒப்பந்தப்படி பாக்கித்தானுக்கு ஓடும்; கங்கை வங்காளதேசத்துக்கு ஓடும். இந்தியாவுக்குள்ளேயே நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகள் தீர்ப்பாயத் தீர்ப்பின்படி அண்டை அயல் மாநிலங்களுக்கு ஓடும்! ஆனால், தீர்ப்பாயம் தீர்ப்புக் கொடுத்தாலும், உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தாலும் காவிரி மட்டும் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு ஓடி வராதா?

இந்த இனப்பாகுபாடு மற்றும் இன ஒதுக்கல் அநீதிக்கு யார் யார் பொறுப்பு?
முதல் குற்றவாளி – கர்நாடகம்; இரண்டாவது குற்றவாளி இந்திய அரசு; மூன்றாவது பொறுப்பாளி உச்ச நீதிமன்றம்!

நான்காவது பொறுப்பாளி நாம்தான்! நாம் என்றால் நமக்கு வாய்த்த அரசியல் தலைமைகள்! சட்டப்படியான காவிரி உரிமையைக் கூட காப்பாற்ற முடியாத தலைமைகள்! அந்த அரசியல் தலைமைகளை சுமந்து கொண்டிருக்கும் நாம்! 

தமிழ்நாட்டின் மக்கள் தொகை எட்டு கோடி! பிரிட்டன், பிரான்சு நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம்! இருந்தும், நமக்கான தேசிய இன அங்கீகாரத்தை இந்திய அரசு தரவில்லை! இனச்சமத்துவம்கூட வழங்கவில்லை! 

இந்திய அரசில் காங்கிரசு இருந்தாலும், பா.ச.க. இருந்தாலும் காவிரியில் தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வந்துள்ளன. 1956ஆம் ஆண்டின் ஆற்று நீர்ப் பகிர்வுச் சட்டப்படியும், இந்திய அரசமைப்புச் சட்டப்படியும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நீதியைக் கிடைக்காமல் காங்கிரசும், பா.ச.க.வும் தடுத்து வந்துள்ளன. 

இப்போதும் அதே நிலைதான்! இந்திய ஆட்சியில் பா.ச.க.! கர்நாடக ஆட்சியில் காங்கிரசு!

பா.ச.க. – காங்கிரசு தலைமைகளின் தமிழர் எதிர்ப்பு அரசியலுக்கு இப்போது உச்ச நீதிமன்றமும் ஒத்தூதுகிறது. அதிலும் தீபக் மிஸ்ரா ஆயம் இந்திய அரசமைப்புச் சட்டத்தை இச்சிக்கலில் புறந்தள்ளி அநீதி இழைத்துள்ளது. 

தமிழ்நாட்டுக் காவிரி உரிமையைப் பலியிடத் திட்டமிடும் மோடி அரசுக்கு முழுவதும் துணைபோகறது உச்ச நீதிமன்றம்!

தமிழ்நாடு தழுவிய அளவில் காவிரி உரிமைப் போராட்டம் எழுச்சி பெற்றுள்ள இன்றைய நிலையில், இறுதி வெற்றி கிடைக்கும் வரை இப்போராட்டத்தைத் தொடர வேண்டும். காவிரி உரிமை மீட்புக் குழு பல போராட்டங்களை நடத்தி வருகிறது. 

அதன் அடுத்த போராட்டம் – 12.05.2018 – காரி (சனி)க்கிழமை காலை 10 மணிக்கு, தஞ்சை விமானப் படைத்தளத்தை முற்றுகையிடும் போராட்டம்!

1. இந்திய அரசே, காவிரித் தீர்ப்பாயம் கூறியுள்ள கட்டமைப்பும் அதிகாரமும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடு! 

2. காவிரி டெல்டாவில் இராணுவத்தை அனுப்பாதே – காவிரியை அனுப்பு! 

3. அதிகாரமில்லாத செயல்திட்டம் அமைத்தால் எதிர்த்துப் போராடுவோம்! 

4. உச்ச நீதிமன்றமே, கட்டப்பஞ்சாயத்து செய்யாதே! சட்டக் கடமையை நடுநிலையோடு செயல்படுத்து! காலம் கடத்தாதே! 

5. தமிழ்நாடு அரசே, தீபக் மிஸ்ரா ஆயத் தீர்ப்பினால் தமிழ்நாடு இழந்துள்ள காவிரி உரிமைகளை மீட்க – காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் அமைத்திட சட்டப்போராட்டம் நடத்து! இனத்துரோகம் செய்யாமல் தமிழ்நாட்டு மக்கள் பக்கம் நில்! 

தமிழர்களே, 12.05.2018 – காரி (சனி)க் கிழமை காலை 10 மணிக்கு தஞ்சை மேலவஸ்தாசாவடியில் கூடி விமானப்படைத்தளம் நோக்கி பெருந்திரளாய் அணிவகுப்போம்!

வாருங்கள் வாருங்கள்!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 98419 49462, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

Wednesday, May 9, 2018

தமிழர் உரிமைப் பறிப்புகளைக் கண்டித்து இன்று (மே 9) சென்னையில் கூட்டங்கள்!

தமிழர் உரிமைப் பறிப்புகளைக் கண்டித்து இன்று (மே 9) சென்னையில் கூட்டங்கள்!
காவிரி, நீட், ஐட்ரோகார்பன் திட்டங்கள் என தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறித்து - நாசகரத் திட்டங்களைத் திணிக்கும் இந்திய அரசைக் கண்டித்து, சென்னையில் இன்று (09.05.2018) நடைபெறும் கண்டனக் கூட்டங்களில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் பங்கெடுக்கிறது. 

எம்.ஜி.ஆர். நகர்

சென்னை எம்.ஜி.ஆர். நகர் - நல்லதம்பி தெரு சந்திப்பில் இன்று மாலை - தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம் ஒருங்கிணைக்கும் - காவிரி உரிமைப் பறிப்பு - தமிழர் ஒத்துழையாமை இயக்க விளக்கக் கூட்டத்தில், த.தே.வி.இ. பொதுச் செயலாளர் தோழர் வே. பாரதி உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் உரையாற்றுகின்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி பங்கேற்று உரையாற்றுகிறார். 

பாடி - இடைத்தெரு

பாடியில், சரவணா ஸ்டோர்ஸ் அருகிலுள்ள இடைத் தெருவில், தமிழர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைக்கும் கண்டனக் கூட்டத்தில், த.வி.க. தலைவர் தோழர் சௌ. சுந்தரமூர்த்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ. நல். ஆறுமுகம் பங்கேற்று உரையாற்றுகிறார்.

இந்நிகழ்வுகளில், தமிழின உணர்வாளர்களும் பொது மக்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! 

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

Tuesday, May 8, 2018

"இந்திய அரசே! இராணுவத்தை அனுப்பாதே! காவிரியை அனுப்பு!" -- காவிரி உரிமை மீட்புக் குழு

இந்திய அரசே! இராணுவத்தை அனுப்பாதே! காவிரியை அனுப்பு! 
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைக்கும் தஞ்சை விமானப் படைத்தள முற்றுகைப் போர்!
இந்திய அரசே! 

காவிரித் தீர்ப்பாயம் கூறிய கட்டமைப்பும் அதிகாரமும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமை!

அதிகாரமில்லாத செயல்திட்டம் அமைத்து இனப்பாகுப்பாடு காட்டாதே!

காவிரிச் சமவெளியை இராணுவ முகாம் ஆக்காதே!

உச்ச நீதிமன்றமே!

இந்திய அரசமைப்புச் சட்டம் மற்றும் 1956 ஆற்று நீர்ப் பகிர்வுச் சட்டம் இரண்டிற்கும் முரணாகத் தீர்ப்புச் சொல்லாதே!

காவிரி வழக்கில் கட்டப் பஞ்சாயத்து செய்யாதே!

தமிழ்நாடு அரசே!

இந்திய அரசின் இனப்பாகுபாட்டு அரசியலுக்குத் துணை போகாதே! சொந்த மக்கள் பக்கம் நில்!

தீபக் மிஸ்ரா ஆயம் இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முரணாக வழங்கியுள்ள தீர்ப்பை மாற்றிட உச்சநீதிமன்ற அரசமைப்பு ஆயம் (Constitution Bench) அமைக்க ஏற்பாடு செய்!

காவிரிச் சமவெளியில் இராணுவத்தை அனுமதிக்காதே!

காவிரிசட சமவெளியைப் பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அறிவித்திடு!

காவரி இல்லாமல் வாழ்வில்லை
களம் காணாமல் காவிரி இல்லை!

தஞ்சை விமானப்படைத் தளத்தை
முற்றுகையிடும் அறப்போராட்டத்திற்கு 
வாருங்கள் தமிழர்களே! 

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு
பேச: 98419 49462, 94432 74002

Monday, May 7, 2018

வைகோ அவர்கள் திராவிடத்தைக் கைவிட்டு தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்த வேண்டும்! தோழர் பெ. மணியரசன்

வைகோ அவர்கள் திராவிடத்தைக் கைவிட்டு தமிழ்த்தேசியத்தை முன்னிறுத்த வேண்டும்! தோழர் பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
மறுமலர்ச்சித் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெள்ளி விழா ஆண்டில் ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் என் அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய அண்ணன் வைகோ அவர்களுக்கும், ம.தி.மு.க. பொறுப்பாளர்களுக்கும் தோழர்களுக்கும் என் நெஞ்சு நிறைந்த வாழ்த்துகளைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.

ம.தி.மு.க.வின் வெள்ளி விழாவை ஒட்டி அண்ணன் வைகோ அவர்களின் சிறப்பு நேர்காணலை ஆங்கில இந்து இதழ் 07.05.2018 அன்று வெளியிட்டுள்ளது. இதழாளர் கோலப்பன் அவர்கள் அச்செவ்வியை எடுத்துள்ளார். அதில் திராவிடம் மற்றும் தமிழ்த்தேசியம் குறித்து வைகோ அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு மட்டும் எனது மாற்றுக் கருத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அந்நேர்காணலில் குறிப்பிட்ட வினாவும் விடையும் வருமாறு :

“கோலப்பன் : திராவிட இயக்கம் நெருக்கடியைச் சந்தித்து வருவதாகக் கருதுகிறீர்களா?

வைகோ : ஆம். ஒரு பக்கம் இந்துத்துவா ஆற்றல்கள் தமிழ்நாட்டில் இடம்பிடிக்க முயலுகின்றன. இன்னொரு பக்கம் தமிழ்த்தேசியக் குழுக்கள் (Tamil Nationalist Groups) திராவிட இயக்கத்தை வலுக்குறையச் செய்ய புறப்பட்டுள்ளன. திராவிட இயக்கத்துடன் இணைந்த ஒரு பகுதிதான் தமிழ்த்தேசியம்.

பழைய சென்னை மாகாணத்தில் தென்மாநிலங்களின் பல பகுதிகள் இணைந்திருந்ததால் திராவிடர் கழகம் என்று பெரியார் பெயர் சூட்டினார். திராவிட இயக்கத்தைப் போல் தமிழ்நாடு மற்றும் தமிழ் வளர்ச்சிக்குப் பாடுபட்டதாக மிகச் சில வேறு இயக்கங்களே உரிமை கோர முடியும்”.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

திராவிடக் கருத்தியலுக்கும், தி.மு.க. – அ.இ.அ.தி.மு.க. கட்சிகளின் அரசியலுக்கும் எதிரான கருத்தியலை எமது தமிழ்த்தேசியப் பேரியக்கமும் முன் வைத்து வருகிறது. அதேவேளை ம.தி.மு.க.வுடன் பல்வேறு தமிழர் உரிமைப் போராட்டங்களில் பங்கேற்று வருகிறது.

மேற்படி நேர்காணலில், “திராவிடர் கழகம்” என்று பெரியார் பெயர் வைத்ததற்குக் காரணம் அப்போது சென்னை மாகாணத்தில் தென்னக மாநிலங்களின் பல பகுதிகள் சேர்ந்து இருந்ததுதான் என்று வைகோ கூறுகிறார். இந்த வாதத்தை ஏற்றுக் கொண்டால், அந்தத் தென் மாநிலங்களின் பகுதிகள் 1950களில் மொழி இன மாநில உருவாக்கம் நடந்தபோது – தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து சென்று விட்டன. எனவே அப்போது வைக்கப்பட்ட “திராவிட” என்ற பெயர் இப்போது பொருந்தாது; அப்பெயர் தேவை இல்லை!

தமிழ்நாட்டிலிருந்து பிரிந்து சென்ற ஆந்திரப்பிரதேசம், கர்நாடகப் பகுதிகள், மலையாளப் பகுதிகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் தங்களைத் திராவிடர் என்ற பெயரில் அப்போதும் அழைத்துக் கொள்ளவில்லை; இப்போதும் அழைத்துக் கொள்ளவில்லை. அப்போது செயல்பட்ட நீதிக்கட்சியின் பெயர் தென்னிந்திய நலவுரிமை சங்கம் தானே தவிர திராவிட நல உரிமை சங்கம் அன்று! நடைமுறையில் தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோர் “திராவிடர்” என்ற இன அடையாளத்தை ஏற்றுக் கொள்ளாத உண்மையைக் கண்ட பிறகாவது பெரியார் தன் கருத்தை மாற்றிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அவர் கடைசி வரை மாற்றிக் கொள்ளவில்லை!

தமிழர்கள் மட்டும் திராவிடர் என்ற பெயரை ஏன் தலைசுமக்க வேண்டும்? தமிழர்களின் சங்க இலக்கியம், காப்பிய இலக்கியம், பக்தி இலக்கியம், சித்தர்கள் இலக்கியம் எதுவுமே திராவிடர் – திராவிட என்ற பெயர்களைக் குறிப்பிடவே இல்லை!

தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, குசராத்தி பேசும் பிராமணர்கள் பஞ்ச திராவிடர்கள் என்று குறிக்கப்பட்டார்கள். ஆனால், தமிழர்களைத் திராவிடர்கள் என்று நம் இலக்கியங்கள் கூறவில்லை. விசயநகர நாயக்க தெலுங்கு மன்னர்களின் ஆட்சி தமிழ்நாட்டில் வேரூன்றி நீண்டகாலம் தொடர்ந்தபோதுதான் “திராவிட” என்பது தமிழர்களையும் குறிக்கும் சொல்லாகப் பிற்காலத்தில் புழக்கத்திற்கு வந்தது.

ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புதூரில் தமிழ்நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்கள் இன்றும் வாழ்கிறார்கள். அவர்கள் புதூரு திராவிட சங்கம் என்று வைத்துள்ளார்கள். புதூரு பிராமணர்கள் மட்டுமே அதில் உறுப்பினர்கள்! (காண்க : http://www.pdassociationnellore.com, http://pudurdravida.com ).

சென்னையில் தென்கனரா திராவிட பிராமணர் சங்கம் – பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது. (The South Kanara Dravida Brahmin Association, Chennai) பதிவு 1953 அக்டோபர் 19. (http://www.skdbassociation.com).

தமிழர் என்றால் “எங்கள் தாய்மொழியும் தமிழ்தான்” என்று பிராமணர்களும் தங்களைத் தமிழர்கள் என்று சொல்லி நம்மோடு சேர வருவார்கள். “திராவிடர்” என்று சொன்னால் பிராமணர்கள் நம்மோடு சேர வர மாட்டார்கள் என்றார் பெரியார்! இவ்வாறு பெரியார் கூறியது வரலாற்று உண்மைகளுக்கு மாறானது என்பதை மேலே கண்டோம். சரியாகச் சொன்னால் திராவிடர் என்பதில் தமிழர்கள்தான் வரமாட்டார்கள்.

சோழப் பேரரசு, பாண்டியப் பேரரசு இரண்டும் வீழ்ச்சியடைந்தபின், பலவகையான அயலார்க்கு நீண்டகாலம் அடிமையாகிப் போனோம். அதனால் அயலார் சூட்டிய பெயர்களையெல்லாம் சுமக்கும் அவலம் தமிழர்களுக்கு ஏற்பட்டது. அவ்வாறு அயலார் சூட்டிய பெயர்கள்தான் திராவிடர் – சூத்திரர் – பஞ்சமர் என்பவை!

அவ்வாறு அடிமைப்பட்ட நிலையில், ஆங்கிலேயர்க்குத் தமிழர்கள் அடிமையானோம். ஐரோப்பாவிலிருந்து வந்த கிறித்துவப் பேராயரும் மொழியியல் ஆய்வாளருமான கால்டுவெல் செய்த பெருங்குழப்பம் திராவிடர் என்று ஓர் இனம் இருந்தது; திராவிடம் என்ற பெயரில் ஒரு மூலமொழி (Proto Language) இருந்தது என்பதாகும்!

தமிழ் மொழியிலிருந்து எந்த அகச்சான்றும் காட்ட முடியாமல் சமற்கிருத நூல்களான மனுதர்ம சாத்திரம், குமாரிலப் பட்டரின் தந்த்ர வார்த்திகா முதலியவற்றிலிருந்து “த்ராவ்ட” என்பதற்கு சான்று காட்டினார் கால்டுவெல்.

திராவிட என்ற பெயரில் ஒரு மூலமொழி இருந்ததே இல்லை. அதற்கான சான்று எள்ளளவும் எங்கேயும் கிடைக்கவில்லை. திராவிட என்ற பெயரில் ஓர் இனம் (Race) இருந்ததே இல்லை!

தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆகியோர் திராவிட மூலமொழி இருந்ததாக ஒப்புக் கொள்வார்கள். ஏன்? தமிழ்தான் அந்த மூலமொழி என்ற உண்மையை மறைக்கவும் மறுக்கவும் இம்மூவருமே மூலமொழி என்ற கருத்தில் மட்டும் தந்திரமாக “திராவிட” என்பதை ஏற்றுக் கொள்வார்கள். தமிழை “சகோதர பாஷா” என்று கூறி – தங்கள் தாய்மொழியின் ஒர் உடன்பிறப்பு தமிழ் மொழி என்று குறுக்கிக் காட்டுவார்கள்.

மற்றபடி தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் ஆகியோர் தங்கள் அரசியல் மற்றும் அன்றாடப் புழக்கம் எதிலும் தங்களைத் திராவிடத்துடன் இணைத்துக் கொள்ளமாட்டார்கள். தெலுங்கர், கன்னடர், மலையாளி என்ற தம்தம் தேசிய இனப் பெயரில் மட்டுமே ஊன்றி நிற்கின்றனர். அவர்களிடம் திராவிடக் குழப்பம் கிடையாது! தமிழ்நாட்டில்தான் திராவிடக் குறுக்குச்சால் ஓட்டி இனக்குழப்பம் விதைக்கப்பட்டது.

பெரியார் குறித்த திறனாய்வு ஏன்?

தமிழ்த்தேசியப் பேரியக்கம் பெரியாரைத் திறனாய்வு செய்வது அவர் பிறப்பை வைத்தல்ல! பெரியாரை மட்டுமின்றி, பல நூறு ஆண்டுகளுக்கு முன் வரலாற்றுப் போக்கில் தமிழ்நாட்டில் குடியேறி தமிழ்நாட்டைத் தங்கள் தாயகமாகக் கொண்டுள்ள தெலுங்கு, கன்னடம், சௌராட்டிரம், உருது, மராத்தி போன்ற மொழிகளைப் பேசும் மக்கள் அனைவரையும் இந்த மண்ணின் மக்களாக – தமிழ் மக்களாக ஏற்றுக் கொள்கிறது நாங்கள் முன்வைக்கும் தமிழ்த்தேசியம்!

இதற்கொரு கால வரம்பு வேண்டும் என்பதற்காக, 1956 நவம்பர் 1இல் தமிழர் தாயகமாகத் தமிழ்நாடு இந்திய அரசால் வரையறுக்கப்பட்ட பின் வந்த அயலார் அனைவரும் வெளியார் என்கிறது த.தே.பே.! இராசீவ்காந்தி தலைமை அமைச்சராக இருந்தபோது வெளியார் சிக்கல் குறித்து அசாமில் போராடிய மாணவர் அமைப்புடன் போட்ட ஒப்பந்தத்தில் ஒரு குறிப்பிட்ட ஆண்டிற்குப் பின் அசாமில் குடியேறியவர்கள் அயலார் என்று வரையறுக்கப்பட்டது.

1. உலகில் முதலில் தோன்றிய இனமான தமிழர் என்ற இனத்தின் பெயரை மறைத்தும், மறுத்தும் பெரியார், “திராவிடர்” என்ற ஆரியப் பெயரை தமிழர்க்குச் சூட்டிப் பரப்பினார்.

2. “தமிழ் காட்டுமிராண்டி மொழி – தமிழைப் படிக்காதீர்கள் – தமிழில் பேசாதீர்கள் – வீட்டில் மனைவியுடன் வேலைக்காரியிடம் கூட ஆங்கிலத்தில் பேசிப் பழகிக் கொள்ளுங்கள்” என்று தமிழர்களிடம் அவர் வலியுறுத்தினார். 1968 – 69 இல் கூட இவ்வாறு வலியுறுத்தினார். “தமிழ்ச் சனியனை விட்டொழியுங்கள்” என்றார்.

3. திருக்குறள் தொடங்கி தமிழ் இலக்கியங்கள் அனைத்தும் குப்பை, உதவாக்கரை என்று பரப்புரை செய்தார். சிலப்பதிகாரத்தைத் தேவடியாள் காப்பியம் என்றார்.

4. திராவிட நாடு விடுதலை, தமிழ்நாடு விடுதலை என்றெல்லாம் பேசிக் கொண்டே இந்திய ஏகாதிபத்திய ஆட்சி நடத்தி வந்த காங்கிரசுக் கட்சிக்கு 1954 முதல் 1967 தேர்தல் வரை – சட்டமன்றத் தேர்தல்களிலும், நாடாளுமன்றத் தேர்தல்களிலும் வாக்குக் கேட்டார் பெரியார்.

இவ்வாறான அவருடைய தமிழிலக்கிய மறுப்புகளும், தமிழை இழிவுபடுத்திய செயல்களும் பற்பல இருக்கின்றன.

வேண்டுகோள்

எனவே அண்ணன் வைகோ அவர்கள், திராவிடத்தை ஒரு தத்துவம் போலவும், திராவிடர் என்ற பெயரில் ஓர் இனம் இருந்ததுபோலவும், திராவிடம் என்ற பெயரில் ஒரு மொழி இருந்தது போலவும் கருதிக் கொண்டு பேசுவதை மறு ஆய்வு செய்ய வேண்டும்.

தமிழ்த்தேசிய இனத்திற்குரிய இயற்கையான அரசியல், மொழி, பண்பாடு, பொருளியல் சார்ந்த “தமிழ்த்தேசியம்” என்ற கருத்தியலை திராவிடத்தை அழிக்க வந்த புதுக் கோட்பாடாகக் கருத வேண்டாம்! அதேபோல், திராவிட – நாற்றங்காலில் முளைத்ததுதான் தமிழ்த்தேசியம் என்ற பிழையான கருத்தியலை வைகோ அவர்கள் கைவிட வேண்டும்.

திராவிடம் பேசுவோர் தமிழ் மொழி – தமிழர் இனம் ஆகியவற்றை ஆதரித்துப் பேசவில்லையா என்று கேட்கிறார். அவர்கள் தமிழ் மண்ணில் அரசியல் நடத்துவதால் தமிழினப் பெருமைகளையும், தமிழ் மொழிச் சிறப்புகளையும் பேசுவது தேவையாக அமைந்தது. தமிழ், தமிழர் உரிமைகளுக்கும் குரல் கொடுக்க வேண்டியதாயிற்று! அதேவேளை, திராவிடக் கருத்தியலை மேலாதிக்கம் செய்ய வைத்து, அதற்குக் கீழ் இரண்டாம் நிலையில் தமிழையும் தமிழர்களையும் வைத்தனர்.

அண்ணன் வைகோ அவர்களும், ம.தி.மு.க.வினரும் தமிழ் மொழி – தமிழ் இன – தமிழர் தாயக – தமிழர் வாழ்வுரிமைப் போராட்டங்களில் மெய்யாகக் களமாடுகிறீர்கள். ஆனால், அதே வேளை காலாவதி ஆகிக் கொண்டிருக்கும் திராவிடக் கருத்தியலைத் தூக்கிப் பிடித்துத் தமிழ்த்தேசியத்தோடு முரண்படுவது அல்லது திராவிடத்திற்குள் தமிழ்த்தேசியத்தை உட்படுத்த முயல்வது தமிழர் நலன்களுக்கும் உரிமைகளுக்கும் பாதிப்புகளை உண்டாக்கும்! உங்கள் வளர்ச்சிக்கும் பாதிப்பை உண்டாக்கும்!

உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன். மறு ஆய்வு செய்யுங்கள்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.comSunday, May 6, 2018

நீட் தேர்வின் தமிழர் உயிர்ப்பறிப்பு தொடர்கிறது! நிரந்தர விலக்கு கோரி ஒருங்கிணைந்த போராட்டம் தேவை! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

நீட் தேர்வின் தமிழர் உயிர்ப்பறிப்பு தொடர்கிறது! நிரந்தர விலக்கு கோரி ஒருங்கிணைந்த போராட்டம் தேவை! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் போட்டி போட்டுக் கொண்டு, மாநில உரிமைகளைப் பறித்து வருகின்றன. அந்த உரிமைப் பறிப்புகளில் ஒன்றுதான் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான “நீட்” தேர்வு! இவ்வாறான மாநில உரிமைப் பறிப்புகள் அதிகமாகத் தமிழ்நாட்டைத்தான் பாதிக்கின்றன.

இந்திய அரசும், உச்ச நீதிமன்றமும் திணித்த “நீட்” தேர்வு கடந்த ஆண்டு மாணவி அனிதாவை பலிவாங்கியது. இந்த ஆண்டும், பலரை அத்தேர்வு பலி வாங்கி வருகிறது.

கடந்த 26.04.2018 அன்று, சேலம் தமிழ்ச் சங்க சாலையைச் சேர்ந்த மாணவர் கெவின்ஹரி என்பவர், நீட் தேர்வுக்குப் பயின்றுவந்த நிலையில், அதனால் ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். 01.05.2018 அன்று, “நீட்” தேர்வுக்குப் படித்து வந்த புதுச்சேரி அரும்பார்த்தபுரம் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த 17 அகவை மாணவி சிவசங்கிரி, “நீட்” தேர்வு மன உளைச்சலால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இப்போது, திருத்துறைப்பூண்டி விலக்குடி மாணவர் கஸ்தூரி மகாலிங்கத்தின் தந்தை கிருஷ்ணசாமி பலியாகியுள்ளார்!

கேரள மாநிலம் – எர்ணாக்குளத்தில் மாணவர் மகாலிங்கம் நீட் தேர்வு எழுத மையம் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அதற்காக மகாலிங்கமும், அவரது தந்தை கிருஷ்ணசாமியும் எர்ணாக்குளத்திற்கு நிற்கக்கூட இடமில்லாமல், கழிவறைக்குள் ஒண்டிக் கொண்டே நீண்ட தொலைவுக்கு விடிய விடிய தொடர்வண்டிப் பயணம் செய்தனர். இதனால், கிருஷ்ணசாமி அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு, தங்கியிருந்த விடுதியில் மாரடைப்பால் இறந்துள்ளார்.

இந்திய அரசைப் பொறுத்தவரை தமிழர்களின் உயிர் ஈ – எறும்பு உயிர்களைவிடவும் மலிவானவை! இந்தியா வெள்ளையரிடமிருந்து விடுதலை பெற்ற காலத்திலிருந்து, இந்திய அரசின் உரிமைப் பறிப்புகளால் நேர்ந்த தமிழர் உயிர்ப் பறிப்புகள் ஏராளம்! ஏராளம்!

1965இல் இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டத்தில், முந்நூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தியா கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்ததால், சிங்களப் படையினால் கடலில் கொல்லப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் 600 பேருக்கு மேல்! இலட்சோப இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்களத்துக்கு இந்தியா உதவி செய்ததைக் கண்டித்து தீக்குளித்து மாண்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் ஏராளம்! காவிரி உரிமை மறுக்கப்பட்டு, வேளாண்மை செய்ய வழியின்றி தற்கொலை செய்து கொண்ட தமிழ்நாட்டு உழவர்கள் பல நூறு பேர்!

இப்பொழுது, எதிர்காலக் கனவுகளோடு கல்வி கற்க இளம் பிஞ்சுகள் – இந்தியாவின் நீட் தேர்விற்கு வரிசையாக பலியாகிறார்கள். மாணவர்கள் மட்டுமின்றி, அவர்களது பெற்றோர்களும் பாதிக்கப்படுகிறார்கள்.

நடுவண் பாடத் திட்ட வாரியம் (சி.பி.எஸ்.இ.) என்பது, பெரும் எண்ணிக்கையில் தனியார் பள்ளிகளைக் கொண்டுள்ள பாடத்திட்ட நிறுவனம்! தனியார் ஆதிக்கமும் வடநாட்டுத் தலைமையும் கொண்ட நடுவண் பாடத்திட்ட வாரியத்திடம் (சி.பி.எஸ்.இ.) நீட் தேர்வு நடத்தும் பொறுப்பை ஒப்படைத்தது ஏன்?

நீட் தேர்வை ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் எதிர்ப்பதால், தமிழ்நாட்டு மாணவர்களைப் பழிவாங்கும் நோக்கத்தில், தமிழ்நாட்டு மாணவர்களை இராசத்தானத்திலும், கேரளத்திலும் தேர்வெழுத மேற்படி வாரியம் அலைக்கழித்துள்ளது. சனநாயகமற்ற இந்த முடிவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்து, இயற்கை நீதிக்குப் புறம்பாக தீர்ப்பு வழங்கியது.

தமிழ்நாடு அரசு, நீட் தேர்வை இனியும் ஏற்றுக் கொள்ளக் கூடாது! தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு விலக்கு சட்ட முன்வரைவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் உடனே தர வேண்டுமென தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும். ஆளுங்கட்சியே முன்வந்து நீட் தேர்வு விலக்கு கேட்டு போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். தமிழ்நாட்டிலிருந்து நிரந்தரமாக நீட் தேர்வை விரட்டும் வகையில், ஒருங்கிணைந்த போராட்டங்களை அனைத்துக் கட்சிகளும், பொது மக்களும் முன்னெடுக்க வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Friday, May 4, 2018

காவிரி உரிமை - கருத்தரங்கம்!

காவிரி உரிமை - கருத்தரங்கம்!
“காவரி உரிமை - சிக்கலும் புரிதலும்” என்ற தலைப்பில், நாளை (04.05.2018) சென்னையில் காப்பீட்டுக் கழகத் தமிழ்ப் பேரவை சார்பில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.

சென்னை எழும்பூர் இக்சா அரங்கில், நாளை (மே 5) மாலை 5 மணிக்கு நடைபெறும் இக்கருத்தரங்கிற்கு, காப்பீட்டுக் கழகத் தமிழ்ப் பேரவை ஒருங்கிணைப்பாளர் திரு. செ. பூரணச்சந்திரன் தலைமை தாங்குகிறார். திரு. த. பிரபு வரவேற்கிறார்.
காவிரி குறித்த ஓவியக் கண்காட்சியை, ஓய்வு பெற்ற எல்.ஐ.சி. கோட்ட மேலாளர் திரு. தே. தலக்கையா தொடங்கி வைத்துப் பேசுகிறார். ஓய்வு பெற்ற வளர்ச்சி அதிகாரி திரு. இரா. மூர்த்தி தொடக்கவுரையாற்றுகிறார்.
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் திரு. பெ. மணியரசன், ஊடகவியலாளர் திரு. கா. அய்யநாதன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்துகின்றனர்.
நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 98419 49462, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT